Wednesday, July 9, 2008

பெண்களைத் தண்டித்தல்...

அறிமுகக் குறிப்பு
குடும்பவாழ்வில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள், பிரச் சினைகளை கையாள்வது எவ்வாறு என்பது தொடர்பில் அல்குர்ஆனும், அஸ் ஸுன்னாவும் பொருத்தமான, சரியான வழிகாட்டல்களை வழங்கியுள்ளன. எனினும் கூட அவற்றைப் புரிந்து கொள்வதில், விளங்கப்படுத்துவதில் பல வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.
இந்நூல் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தினால் 2003 ஆம் ஆண்டு அறபு மொழியில் வெளியிடப்பட்டதாகும். இதன் ஆங்கிலப் பதிப்பான Marital Discard Recapturing the full islamic sprit of the Human Diginityஎன்ற பிரதியின் தமிழாக்கமே இதுவாகும்.இந்நூல் ஆசிரியர் கலாநிதி அப்துல் ஹமீத் அபூஸுலைமான் அமெரிக்காவில் தலைமையகத்தை கொண்டு செயற்படும் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தினதும், சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தினதும் தலைவர்; மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர்.
வெளியீட்டாளர் குறிப்பிலிருந்து...
குடும்ப வாழ்வு பிரச்சினையே இல்லாததொன்றல்ல. சுமூகமான நிலைமையே எப்போதும் நீடிக்கும் என்பதும் இல்லை. பிணக்குகள் ஏற்பட்டு இக்கட்டான சூழ்நிலைக்கு கணவன்மனைவியர் தள்ளப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அத்தகு நிலைமைகளில் சம்பந்தப்பட்டவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் குர்ஆன் அறிவுறுத்தல்கள் தருகின்றது.இவற்றின் தொடரில் அடக்கமில்லா மனைவியை பொறுத்து கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த வசனம் (4:34) மேலைத்தேச நாடுகளிலும் சில முஸ்லிம் வட்டாரங்களிலும்கூட பெண்களை அடித்து துயருறுத்த ஆண்க ளுக்கு அழிக்கப்பட்டுள்ள அனுமதியே என கொள்ளப்பட்டு பெரும் கண்ட னங்களை எழுப்பி வைத்துள்ளது. பிரச்சினையை சரியான முறையில் அணுகி, ஆராய்ந்து, தக்க தீர்வினை, இறைவாசகங்களினதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஸுன்னாவினதும் அடிப்படையில் கண்டு கொள்வதே கலாநிதி அபூ ஸுலைமான் கையாளும் முறைமை.
எடுத்துக் கொண்டுள்ள பொருளை பெண்ணுணர்வுகள் மீதான ஆழ்ந்த அனுதாபத்துடன் அணுகியிருப்பது இதம் தருகின்றது. இத்தகு அணுகுமுறை சாதாரணமாக பெண்கள் பற்றிய ஆண்களது ஆக்கங்களில் காணப்படுவது அரிது.
என் குறிப்பு
குடும்பவாழ்வை பாதிக்கும் காரணிகளை அல்குர்ஆன் அடையாளப்படுத்தியுள்ளதோடு,அவற்றை தீர்ப்பதற்கான அழகிய வழிமுறை களையும் சொல்லித் தந்துள்ளது. ரஸுல் (ஸல்) அவர்களது குடும்பவாழ்வு அதற்கான சிறந்த முன் மாதிரியாக அமைந்தது என்பதை இந்நூல் விளக்கிச் சொல்கின்றது. முஸ்லிம் பெண்கள் அடக்கப்படுகின்றார்கள்; ஒடுக்கப்படுகின் றார்கள். என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்னெடுக்கப்படுகின்ற சூழலில் அல்குர்ஆனின் வசனங்களும் அதற்கு துணையாக,பிழையாக விளக்கப்படு வதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
“இன்னும் எந்தப் பெண்களின் மாறுபாட்டை நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு நீங்கள் உபதேசம் செய்யுங்கள் (அதில் திருந்தாவிடின்) படுக்கையிலிருந்து ஒதுக்கி வையுங்கள் (அப்போதும் திருந்தாவிடின்) அவர்களை காயம் படாமல் இலேசாக அடியுங்கள். (பின்னர்) அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டால் அவர்களின் மீது குற்றஞ்சாட்ட வேறு வழிகளை தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், சக்தி படைத்தவனாகவும் இருக்கின்றான். (4:34)இவ்வசனத்தில் உபதேசித்தல், படுக்கையிலிருந்து ஒதுக்கி வைத்தல் என்பவற்றைத் தொடர்ந்து சொல்லப் படுகின்ற ‘இலேசாக அடித்தல்’ என்ற சொற்பிரயோகம் தனித்து இந்நூலில் ஆராயப்படுகின்றது.
இச்சொற்பிரயோகத்திற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டபோது பல்துலக்கும் குச்சி, அல்லது சிறிய தடியால் அடித்தல் என்று விளக்கம் கூறியுள்ளார். ஆனால் முதலிரு வழிமுறைகளை விடவும் தாக்கம் கூடியதாய் இது அமையவில்லை. எனவே இதன் கருத்து என்ன? என்று ஆராய்ந்து சொல்கின்றார் கலாநிதி அபூஸுலைமான்.

No comments: